குடும்ப வன்முறை

குடும்ப வன்முறை (Häusliche Gewalt) தடை செய்யப்பட்டுள்ளது. அதைச் செய்பவர் மீது வழக்கு தொடரப்படும். குடும்ப வன்முறையை எதிர்கொள்ளும் போது உதவியைப் பெறுவது முக்கியம். பல்வேறு அமைப்புகள் இதைப் பற்றிய தகவல்கள், ஆலோசனைகள் மற்றும் ஆதரவை வழங்குகின்றன. இந்த ஆலோசனைகள் இரகசியமானது மற்றும் இலவசம். தேவைப்பட்டால், ஒரு மொழிபெயர்ப்பாளர் மொழிபெயர்க்கலாம்.

அவசரகாலத்தில்

இந்த அமைப்புகள் அவசர காலத்தில் உதவுகின்றன:

  • காவல்துறை அவசர அழைப்பு எண் (24 மணிநேரமும்), தொலைபேசி. 112 அல்லது 117, www.polizei.bl.ch
  • இரு பாசிலுக்குமான பெண்கள் தங்குமிடம் (24 மணிநேரமும்), தொலைபேசி. 061 681 66 33, www.frauenhaus-basel.ch
  • மருத்துவ அவசர அழைப்பு மையம் (24 மணிநேரமும்), தொலைபேசி. 061 261 15 15, www.mnzbasel.ch
  • பாசில் லாண்ட் மாநில அரசு மருத்துவமனை அவசர நிலையங்கள் (லீஸ்ட்டால் , லௌஃபென் , ப்ரூடர்ஹோல்ட்ஸ், 24 மணிநேரமும்), www.ksbl.ch/notfall
  • பாசில் லாண்ட் மனநல மருத்துவம் (24 மணிநேரமும்), தொலைபேசி. 061 553 56 56, www.pbl.ch/notfall

குடும்ப வன்முறை என்றால் என்ன?

குடும்ப வன்முறை (Häusliche Gewalt) என்பது குடும்பம் அல்லது திருமணத்தில் ஏற்படும் வன்முறை: அவர்கள் இப்போது ஒன்றாக வாழ்கிறார்களா என்பதின்றி, திருமணமானவர்கள் அல்லது ஒன்றாக இருப்பவர்கள் அல்லது ஒன்றாக இருந்தவர்கள் இடையேயான வன்முறை. பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இடையே அல்லது சகோதர சகோதரிகளுக்கு இடையிலான வன்முறையும் குடும்ப வன்முறையாகும்.

குடும்ப வன்முறையின் பல்வேறு வடிவங்கள் உள்ளன - உடல், உளவியல், பாலியல் மற்றும் பொருளாதார வன்முறை. எடுத்துக்காட்டாக: தொடர் அவமதிப்பு, தொடர்பைத் தடை செய்தல், அடைத்து வைத்தல், தள்ளுதல், கட்டுப்படுத்துதல், உடலுறவு கொள்ள வற்புறுத்துதல், பணத்தை அபகரித்தல், ஒரு மொழியைக் கற்கத் தடை செய்தல் மற்றும் குழந்தைகளைப் புறக்கணித்தல். அச்சுறுத்தல்களும் குடும்ப வன்முறை ஆகும். குடும்ப வன்முறை தடைசெய்யப்பட்டுள்ளது.

குடும்ப வன்முறையால் அனைவரும் பாதிக்கப்படலாம்: இளைஞர்கள் மற்றும் வயதானவர்கள், சுவிஸ் பாஸ்போர்ட் உள்ளவர்கள் மற்றும் இல்லாதவர்கள், பணக்கார மற்றும் ஏழை குடும்பங்கள். பாதிக்கப்பட்டவர்கள் உதவி பெறுவது முக்கியம்.

பாதிக்கப்பட்டவர்களுக்கான ஆலோசனை

ரகசியமானது மற்றும் தேவைப்பட்டால் மொழிபெயர்ப்புடன்:

  • இரு பாசிலுக்குமான பாதிக்கப்பட்டோர் உதவி, தொலைபேசி. 061 205 09 10, www.opferhilfe-beiderbasel.ch
  • பாதிக்கப்பட்டோர் உதவியின் உரையாடல் மூலம் ஆலோசனை, www.opferhilfe-beiderbasel.ch/chat
  • இரு பாசிலுக்குமான பெண்கள் தங்குமிடம் (24 மணிநேரமும்), தொலைபேசி. 061 681 66 33, www.frauenhaus-basel.ch
  • பாசில் பிராந்தியத்திற்கான ஆண்கள் அலுவலகம், தொலைபேசி. 061 691 02 02, www.mbrb.ch/beratung
  • கை கொடுக்கும் கை (24 மணிநேரமும்), தொலைபேசி. 143, www.143.ch

வன்முறையாளர்களுக்கு உதவி

குடும்ப வன்முறைக்கு எதிரான கல்வித் திட்டத்தில் (Lernprogramm gegen Häusliche Gewalt), வன்முறை இல்லாமல் மோதல்களை எவ்வாறு தீர்ப்பது என்பதை பங்கேற்பவர்கள் கற்கிறார்கள். இந்தத் திட்டம் பெரியவர்களுக்கானது. இந்தத் திட்டம் இலவசம்.

எவருக்கும் உடனடியாகப் பேசுவதற்கு ஆள் தேவைப்பட்டால், "கை கொடுக்கும் கை"-ஐ (Dargebotene Hand) தொலைபேசி, குறுஞ்செய்தி,, உரையாடல் அல்லது மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம். அங்கே எப்போதும் யாரோ ஒருவர் இருப்பார். இரவில் கூட தொடர்பு கொள்ளலாம். பெயர் குறிப்பிடாமல் (அநாமதேயமாக) தொடர்பு கொள்ளலாம்.

குழந்தைகள்

வீட்டில் வன்முறையை அனுபவிக்கும் குழந்தைகளுக்கு உதவி தேவை. குழந்தைகள் வீட்டில் வன்முறையை அனுபவிக்கும் போது, அவர்களின் வளர்ச்சியில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்துகிறது. குழந்தைகள் வன்முறையின் நேரடி இலக்குகளாக இல்லாவிட்டாலும் இது நடக்கும். வீட்டில் வன்முறையை அனுபவிக்கும் குழந்தைகள் குடும்பத்திற்கு வெளியே யாரிடமாவது பேச வேண்டும். உதாரணமாக: ஆசிரியர்கள், பள்ளி சமூக சேவகர்கள், நண்பர்களின் பெற்றோர் அல்லது அண்டை வீட்டார்.

சில குழந்தைகள் அமைதியாக அவதிப்படுகிறார்கள், மற்றவர்கள் அறிகுறிகளைக் காட்டுகிறார்கள். எடுத்துக்காட்டாக: பள்ளியில் சிரமங்கள், படுக்கையில் சிறுநீர் கழித்தல், தலைவலி, உணவு அல்லது தூக்கக் கோளாறுகள், மற்ற குழந்தைகளைக் கையாள்வதில் சிக்கல்கள் அல்லது முரட்டுத்தனமாக செயல்படுதல்.

பாதிக்கப்பட்டோர் உதவி (Opferhilfe) குழந்தைகள் குடும்ப வன்முறையை அனுபவிக்கும் போது அவர்களுக்கு ஆலோசனை அளிக்கிறது. Pro Juventute ஐ குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் இரவும் பகலும் அழைக்கலாம் (தொலைபேசி. 147) அல்லது குறுஞ்செய்தி, உரையாடல் அல்லது மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம். அவர்களின் நிபுணர்கள் உரையாடலைப் பற்றி யாரிடமும் சொல்ல மாட்டார்கள். பாதிக்கப்பட்டவர்களின் பிரச்சனைகளைக் கேட்டு அவர்களுக்கு தீர்வு காண உதவுகிறார்கள். இந்த அழைப்புகள் இலவசம். அழைப்பாளர்கள் தங்கள் பெயர்களைக் குறிப்பிட வேண்டியதில்லை.

பாலியல் வன்முறை

திருமணத்திலும் மற்றும் குடும்பத்திலும் பாலியல் தாக்குதல்கள் நிகழ்கின்றன. பாலியல் வன்முறை என்பது குடும்ப வன்முறையின் ஒரு வடிவம். காவல்துறையில் புகார் அளிக்கலாம். பாதிக்கப்பட்ட ஒருவர் போலீசில் புகார் செய்ய விரும்பாவிட்டாலும், தாக்குதலுக்குப் பிறகு மருத்துவப் பரிசோதனை செய்வது முக்கியம்.

பாசில்லாண்ட் மாநில மருத்துவமனை (Kantonsspital Baselland) இரகசிய சிகிச்சையை மேற்கொள்கிறது:

  • மருத்துவர், யாரிடமும் எதையும் சொல்வதில்லை.
  • வன்முறை ஆவணப்படுத்தப்படுகிறது.
  • இந்த ஆவணங்களை பின்னர் காவல்துறையிடம் கொடுக்கலாம். இது முக்கியமான சான்று.
  • பாதிக்கப்பட்டோர் உதவி சேவைகளுடன் (Opferhilfe) மருத்துவர் இணைந்து செயல்படலாம்.

வன்முறைக்கும் பரிசோதனைக்கும் இடையில்:

  • பாதிக்கப்பட்டவர்கள் குளிக்கவோ அல்லது கழுவவோ கூடாது - கைகளை கூட கழுவக் கூடாது .
  • முடிந்தால், பாதிக்கப்பட்டவர்கள் கழிப்பறைக்குச் செல்வதைத் தவிர்க்கலாம்
  • பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் ஆடைகளைத் துவைக்கக்கூடாது , பரிசோதனைக்காக உடன் கொண்டு வர வேண்டும்.

போலீசில் புகார் செய்யுங்கள்:
சில குடும்ப வன்முறை குற்றங்களுக்குத் தானாகவே காவல்துறையால் வழக்கு தொடரப்படும். எனவே, காவல்துறையிடம் புகார் செய்வதற்கு முன், பாதிக்கப்பட்டோர் உதவியிடம் (Opferhilfe) ஆலோசனையைப் பெறுவது முக்கியம். எனவே நீங்கள் உங்கள் முடிவுகளை நன்கு பரிசீலித்து அனைத்து சாத்தியக்கூறுகளையும் அறிந்து கொள்ளலாம். பாலியல் வன்கொடுமை புகார்களில் காவல்துறைக்கு அனுபவம் உண்டு. ஆய்வுகள் ஒரே பாலினத்தவரால் நடத்தப்படுகின்றன. காவல் நிலையத்தில் அறிக்கை சமர்ப்பிக்கலாம். நீங்கள் நம்பும் நபரையோ அல்லது பாதிக்கப்பட்டோர் உதவியில் (Opferhilfe) உள்ள நிபுணரையோ உங்களுடன் அழைத்துச் செல்லலாம்.

வசிக்கும் உரிமை

ஒரு நபர் திருமணத்தின் அடிப்படையில் சுவிட்சர்லாந்தில் இருந்து குடும்ப வன்முறையை அனுபவித்தால், அந்த நபர் பிரிந்த பிறகும், சூழ்நிலையைப் பொறுத்து சுவிட்சர்லாந்தில் இருக்க முடியும். ஒவ்வொரு சூழ்நிலையும் வித்தியாசமானது. அதனால்தான் ஆலோசனை பெறுவது முக்கியம். பாதிக்கப்பட்டோர் உதவி (Opferhilfe) ஆதரவை வழங்க முடியும். ஆலோசனை இலவசம் மற்றும் ரகசியமானது.

வன்முறைக்கு ஆதாரம் இருப்பது முக்கியம். எடுத்துக்காட்டாக: காயங்களின் புகைப்படங்கள், அச்சுறுத்தல்கள் அல்லது துஷ்பிரயோகத்தின் ஸ்கிரீன்ஷாட்கள் வாட்ஸ்அப், முகநூல் (பேஸ்புக்) போன்றவற்றில். ஆதாரங்கள் பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட வேண்டும். உதாரணமாக, ஒரு நண்பரின் வீட்டில் அல்லது வேலை செய்யும் இடத்தில். வன்முறையை சுற்றியுள்ள மக்களுக்கு தெரியப்படுத்துவதும் நல்லது.

பின்தொடர்வது (Stalking) என்றால் என்ன?

ஸ்டாக்கிங் என்பது ஒரு நபரை அவரின் விருப்பத்திற்கு எதிராக அதிகமாகப் பார்ப்பது, தொடர்புகொள்வது, பின்தொடர்வது மற்றும் துன்புறுத்துவது. எடுத்துக்காட்டாக: அதிக எண்ணிக்கையிலான குறுஞ்செய்திகள், மின்னஞ்சல்கள் மற்றும் பிற செய்திகளை அனுப்புதல், வேலை செய்யுமிடத்தில் அல்லது வீட்டில் பதுங்கியிருத்தல், தொலைபேசியில் தொந்தரவு செய்தல், தேவையற்ற பரிசுகள் மற்றும் நபரின் வெளிவட்டாரத்தில் இருந்து தகவல்களைத் தேடுதல். அதைச் செய்பவர்கள் பெரும்பாலும் பாதிக்கப்பட்டவருக்கு (முன்னாள் கணவன்/மனைவி) தெரிந்தவர்கள் ஆனால் அவர்கள் அந்நியர்களாகவும் இருக்கலாம்.

பின் தொடர்வதை நிரூபிக்க முடியும் என்பது முக்கியம். எடுத்துக்காட்டாக, பாதிக்கப்பட்டவர்கள் தனிப்பட்ட பின்தொடர்தல் செயல்களின் குறிப்பை வைத்திருக்கலாம் (எ.கா. பரிசுகள், குறிப்புகள், தொலைபேசி அழைப்புகள்), பாதிக்கப்பட்டவர்கள் தங்களைச் சுற்றியுள்ளவர்களுக்குத் தெரிவிக்கலாம் மற்றும் எந்த மெசேஜ்களின் ஸ்கிரீன் ஷாட்கள்/புகைப்படங்களை எடுக்கலாம் (வாட்ஸ்அப், பேஸ்புக், முதலியன).

கட்டாய திருமணம் என்றால் என்ன?

ஒருவர் குடும்பத்தின் அழுத்தத்தின் பேரிலும், அந்த நபரின் சொந்த விருப்பத்திற்கு மாறாகவும் இன்னொருவரை மணந்தால், அது கட்டாயத் திருமணம் (Zwangsheirat) எனப்படும். திருமணம் செல்லாததாக அறிவிக்கப்படலாம். திருமண பந்தத்தில் இருக்க வேண்டுமா அல்லது பிரிந்து வாழ வேண்டுமா என்பதைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரமும் ஒருவருக்கு உண்டு. ஒருவர் தனது விருப்பத்திற்கு மாறாக திருமண பந்தத்தில் இணைந்திருந்தால், அது கட்டாயத் திருமணம் என்றும் அழைக்கப்படுகிறது. கட்டாயப்படுத்துவதற்கான எடுத்துக்காட்டுகள்: மிரட்டல்கள், அச்சுறுத்தல்கள், மன அழுத்தம் அல்லது உடல்ரீதியான வன்முறை. சுவிட்சர்லாந்தில் கட்டாயத் திருமணம் மற்றும் கட்டாயத் திருமண வாழ்க்கை தடைசெய்யப்பட்டுள்ளது.

பெண் விருத்தசேதனம் என்றால் என்ன?

பெண் விருத்தசேதனத்தில் (Mädchenbeschneidung FGM/FGC), பெண்ணின் பிறப்புறுப்புகள் வெட்டப்படுகின்றன. வெவ்வேறு வடிவங்கள் மற்றும் நடைமுறைகள் உள்ளன. விருத்தசேதனம் செய்யப்பட்ட பல சிறுமிகள் மற்றும் பெண்கள் விருத்தசேதனத்தின் விளைவாக உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர். பெண் விருத்தசேதனம் தடைசெய்யப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்திற்கு வெளியே தங்கள் குழந்தையை விருத்தசேதனம் செய்வதற்கு ஏற்பாடு செய்தால், பெற்றோர்கள் மீதும் வழக்கு தொடரப்படும்.